வெள்ளி, 4 டிசம்பர், 2020

பங்குச்சந்தை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாமா

பங்குச்சந்தை என்றால் என்ன?

பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். ஆனால், காய்கறிக்கோ, மற்ற பொருட்களுக்கோ தேவைப்படுவது போல, பங்குச்சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இருப்பிடம்(Physical presence) தேவையில்லை. கணிணி மூலமாகவும், முகவர்கள்(Brokers) மூலமாகவும் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இன்றைய தேதியில் உலகப் பொருளாதாரம் பங்குச்சந்தையைப் பெரும்பாலும் சார்ந்துள்ளது என்றால் அது மிகையன்று. எனவே பங்குச் சந்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்வது இன்றியமையாதாகிறது.
பங்குச்சந்தையைப் பற்றி அறிந்துகொள்ளுமுன் வேறு சிலவற்றைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

சேமிப்பும் முதலீடும் :

சேமிப்பும்(savings) முதலீடும்(investment) ஒன்றல்ல. சேமிப்பெல்லாம் முதலீடில்லை,சேமிப்பின்றியும் முதலீடில்லை. சேமிப்பு என்பது, ஒருவர் தனது வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்திற்காக ஒதுக்கி வைப்பது. முன் காலத்தில் பெண்கள் புளிப் பானையில், அல்லது ஐந்தரைப் பெட்டியில், தம்மிடம் உள்ள பணத்தைப் போட்டு வைப்பார்களாம். அப்படி வீட்டிலேயே பணத்தை வைத்திருந்தாலும் சரி, அஞ்சலகத்திலோ, வங்கிகளிலோ போட்டுவைத்தாலும் சரி, அல்லது ஏதேனும் சொத்து வாங்கினாலும் சரி, அது சேமிப்புதான்.

சேமிப்பை எப்போது முதலீடு என்று அழைக்கலாம்? சேமித்த பணத்தைப் பயன்படுத்தி, நீங்கள் அதன் மூலம் வருமானம்(income) பெற்றால்மட்டுமே அது முதலீடாகக் கருதப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் பணத்தை வங்கியில் சேமித்து, வட்டி பெறலாம்.வியாபாரத்தில் போட்டு, பல மடங்காக்க முயலலாம். பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கலாம். நிலமோ, வீடோ வாங்கலாம். சிலவகை முதலீடுகள், சிறிய தொடர்ச்சியான வருமானத்தைத் தரக்கூடியவை (வங்கியில் மாதாந்திர வட்டி). சிலவோ, விற்கும்பொழுது, பலமடங்கு லாபம் தரக்கூடும் (நிலம், வீடு, பங்குகள்).

முதலீடு செய்யும் வழிகள் :

மிகவும் கடினமாக உழைத்து நாம் சேமித்த பணத்தை, சரியான முறையில் முதலீடு செய்வது அவசியம். முதலீடு செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றின் சாதக பாதகங்களைப்
பார்க்கலாமா?

அசையாச் சொத்துகள் :

நிலம், வீடு முதலியவற்றில் செய்யப்படும் முதலீடு மிகவும் லாபகரமானது. இவற்றின் மதிப்பு பொதுவாக உயருமே அன்றிக் குறைவதில்லை. ஆனால், இது, சிறு முதலீட்டிற்கு ஏற்றதில்லை. நிலமோ, வீடோ வாங்கவேண்டுமானால், பொதுவாகப் பெருந்தொகை தேவைப்படக்கூடும். மேலும், இவற்றை, இலகுவாக அவசரத் தேவையின்போது விற்க இயலாது, மொத்தமாக, ஏதேனும் உபரிப்பணம் வரும்போது, நீண்ட காலத்தேவையை மனதில் கொண்டு, செய்யக்கூடிய சிறந்த முதலீடு இது எனினும், சிறு வருமானம் உடையவர்களோ, குறுகிய காலத்தில் தமது முதலீட்டைப் பணமாக மாற்ற வேண்டுமென்று நினைப்பவர்களோ இவ்வகை முதலீட்டினை மேற்கொள்ளுவது கடினம்.

அசையும் சொத்துகள் :

நகை, வங்கிச்சேமிப்புகள், கடன் பத்திரங்கள், பங்குகள் முதலியவை இவ்வகைச் சாரும். தங்கம் ஒரு எளிமையான முதலீடாகக் கருதப் படுகிறது. ஆயினும், இதனைப் பாதுகாத்துவைப்பது சற்றே கடினமென்பது பொதுவான அபிப்பிராயம். அது மட்டுமல்ல, விற்றால் மட்டுமே இதன் இலாபத்தின் பயனை அனுபவிக்க முடியும். ஆனால் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலையும், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தொய்வு நிலையும், இன்றைய நிலையில், தங்கமே சிறந்த முதலீடு எனப்பலரையும் எண்ண வைக்கிறது.

வங்கிச் சேமிப்புகள்(Bank Deposits) நடுத்தர வர்க்கத்தினராலும், முதியவர்களாலும் மிகவும் விரும்பப் படுவது. அபாயமில்லாதது(Risk free). பரிவர்த்தனைகள் (Transactions) எளிமையானவை. ஆனால், இதில் வரவு, சற்றே குறைவுதான். கடன் பத்திரங்கள் (Bonds) பொதுவாக வங்கிச்சேமிப்புகளை விட அதிகமாகவும், பங்குகளை விடக் குறைவாகவும் லாபம் ஈட்டித்தரும் முதலீடுகள்.

பங்குகளைத் துணிகரமான முதலீடுகள்(Risky investments) என வகைப்படுத்தலாம். இவ்வகை முதலீடுகளில், லாபம் வர எவ்வளவு வாய்ப்பு உள்ளதோ, அதே அளவு போட்ட முதல்(capital) பறிபோகவும் வாய்ப்பு உள்ளது என்பதால், முன்பெல்லாம், நடுத்தர மக்கள் பங்கு வர்த்தகத்தில் அதிக ஈடுபாடு காட்டியதில்லை. ஆனால், நிலைமை மாறிவருகிறது. . மக்கள் இன்று விரைவாக பணத்தைப் பெருக்க விரும்புகிறார்கள். எனவே, பங்குச்சந்தை முதலியவற்றில் துணிந்து இறங்குகின்றனர்.எனவே, பங்குச் சந்தை பற்றிய அறிவு இன்று அவசியமாகிறது.

சரி. பங்கு என்றால் என்ன? அதற்கு முதலில் விடை வேண்டுமல்லவா?

பங்குகள் :

நீங்கள் ஒரு தொழில் தொடங்க விரும்புகிறீர்கள். அதற்கு, மூலதனம்(capital) தேவையல்லவா? தொழில், சிறிய அளவில் இருக்குமானால், உங்கள் கைப்பணத்தைப் போட்டால் போதுமானது. அதுவே சற்றுப் பெரிய அளவில் இருக்குமானால், உங்கள் கைப்பணம் போதாமல், கொஞ்சம் வெளியில் கடன் வாங்குவீர்கள். மிகப் பெரிய அளவில் நடைபெறும் தொழில் அல்லது வியாபாரமானால், தேவைப்படும் மூலதனத்தைத் திரட்ட நீங்கள் பங்குகளை வெளியிடலாம். அதாவது, இதன் மூலம், பொதுமக்கள் பலரும் உங்கள் நிறுவனத்தில் முதலீட்டாளர்களாகின்றனர்.
உதாரணமாக, உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்டால், அதைப் பத்து ரூபாய் முக மதிப்புள்ள(Face value) 10 லட்சம் பங்குகளாக்கி, பொது மக்களிடம் விற்கலாம். பொதுமக்கள் தமது வசதிக்கேற்ப, அப்பங்குகளில் முதலீடு செய்வர்.

இதனால் என்ன பயன்?

நிறுவனதாரர், தமது கைப்பணத்தையோ, கடன் வாங்கிய பணத்தையோ முதலீடு செய்தால், நட்டமோ லாபமோ அவரை மட்டுமே சார்ந்தது. ஆனால், பங்குகளை வெளியிடுவதன் மூலம், நட்டம் லாபம் இரண்டுமே பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வாங்கிய தொகைக்கு வட்டி எதுவும் கிடையாது. லாபம் வந்தால், பங்காதாயம் ( dividend) கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். என்ன? பங்குகளை வெளியிட்டபின், அந்நிறுவனம், தனி நபருக்குச் சொந்தமானது என்ற நிலையில் இருந்து மாறி, பங்கு நிறுவனம் ஆகிவிடுகிறது.

முதலீடுகளின் சில வகைகளைப் பற்றியும், பங்கு என்றால் என்ன என்றும் பார்த்தோம். பங்குச்சந்தையைப் பற்றி மேற்கொண்டு தொடருமுன், பங்குச்சந்தை எப்போது தோன்றியது என்ற விவரத்தை அறிந்துகொள்ளலாம். 14ஆம் நூற்றாண்டில், வெனிஸ் நகர ஆட்சியர்கள், தாம் பிற நாடுகளில் வாங்கிய கடன்களைத்திருப்பித் தர வசதியில்லாததால், மக்களிடையே கடன் பத்திரங்களை வினியோகித்தனர். அப்பத்திரங்கள் வியாபாரிகளாலும், நில உரிமையாளர்களாலும் வாங்கி, விற்கப்பட்டன. பின் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும், இத்தகைய பத்திரங்களை அரசின் பற்றாக்குறைகளின் போது வெளியிடத்தொடங்கின. பின், 1693ம் ஆண்டு தொடங்கி, லண்டனில் இவ்வகைப் பத்திரங்களை அரசும், பிற பெரு நிறுவனங்களும் வெளியிட்டன. அதை வாங்கி, விற்க விரும்பியவர்கள், அதற்கான முகவர்கள் ஆகியோர், உணவகங்களில் கூடினர். நாள்பட, நாள்பட பரிவர்த்தனைகள் அதிகரித்தபின்னர், 1773ல் முதன்முதலில் முகவர்கள் அனைவரும் 'விற்பனைக்கான கழகம் ஒன்றைத் துவங்கினர். 1801ல் லண்டனில் வசித்த முகவர்கள் 20000 பவுண்டுகளைத் திரட்டி 'லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' ஐத் தொடங்கினர். இதே சமயத்தில் அமெரிக்காவிலும் இத்தனைய பங்குவர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்தன. 1817ல் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் துவங்கப்பட்டது. இவையிரண்டுமே உலகின் மிகப் பழமையான பங்கு வர்த்தக சபைகளாகும்.
பங்குச்சந்தை பற்றி மேலும் தகவல்களை அறியுமுன், நாம் நிறுவனங்களின் வகைகள் குறித்துச் சில விவரங்களை இங்கு பார்க்கலாம்.

தனி நபர் நிறுவனம் (proprietorship concern) :


ஒரே ஒருவர், தனது கைப்பணத்தை (அல்லது தான் கடன் வாங்கிய பணத்தைப்) போட்டு ஒரு நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்று கொள்வோம், அந்நிறுவனத்தின் லாபமோ நட்டமோ அவரை மட்டுமே சேர்ந்தது. அந்நிறுவனத்தின் முழுப்பொறுப்பும் அவரையே சாரும். இத்தகைய நிறுவனத்தை ' தனி நபர் நிறுவனம் ' (proprietorship concern) என்று அழைப்போம். அந்நிறுவனதாரர் 'உரிமையாளர்' (proprietor) என்று அழைக்கப்படுவார்.

கூட்டு நிறுவனம் (Partnership company) :

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஸ்தாபனம், கூட்டு நிறுவனமாகும் (Partnership company). இதன் உரிமைதாரர்கள் கூட்டாளிகள்(partners) எனப்படுவர். லாபம், நட்டம் எதுவாயினும், சமமாகக் கூட்டாளிகளுக்குள் பிரித்துக்கொள்ள வேண்டும். நிறுவன நடவடிக்கைகளுக்கு, அனைவரும் பொறுப்பாவார்கள். நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளால், ஏதேனும் கடன் ஏற்பட்டாலோ, நிறுவனம் திவாலானாலோ, கூட்டாளிகளின் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட பறிமுதல் செய்ய, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு.

வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம். (Limited Company) :


மேற்கூறியவாறு ஒரு கூட்டு நிறுவனம் செயல் படும்பொழுது, தனிப்பட்ட முறையில் கூட்டாளிகள் அந்நிறுவனத்தின் கடன் சுமைக்குப் பொறுப்பாவார்கள் என்று கண்டோம். ஒரு நிறுவனம் விரிவாக்கப் படும்பொழுதோ, பெரிய அளவில் தொடங்கப்படும்பொழுதோ, இத்தகைய பொறுப்புக்களைத் தவிர்க்கவும், மற்றும் பல நிர்வாக வசதிகளுக்காகவும் வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன. அதாவது கம்பெனியின் கடனுக்கு, பங்குதாரர்கள் பொறுப்பாக மாட்டார்கள். ஏனெனில், கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் (பங்குதாரர்களிடம் இருந்து வேறுபட்ட) கருதப்படுகிறது. இவற்றை மேலும் இரண்டு விதமாகப் பகுக்கலாம். அவையாவன:

தனியார் பங்கு நிறுவனம் (Private Limited Company) :

அனேகமாக கூட்டு நிறுவனங்கள் விரிவு செய்யப்படும்பொழுது, இவ்வகையான தனியார் நிறுவனங்களாக மாற்றப் படுகின்றன. இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் அநேகமாக, நண்பர்களாகவோ, உறவினர்களாகவோதான் இருப்பர். பொதுமக்களுக்கு பங்குகளை வினியோகம் செய்வதிலிருந்து, தனியார் பங்கு நிறுவனங்கள் தடுக்கப் பட்டுள்ளன. எனினும், தமது முதலீட்டின் அளவு வரை மட்டுமே, பங்குதாரர்கள் கம்பெனியின், கடன்களுக்குப் பொறுப்புடையவர்கள் ஆவர்.

பொதுப் பங்கு நிறுவனம் (Public Limited Company) :

தனியார் பங்கு நிறுவனங்கள் காலப்போக்கில் மிகவும் விரிவாக்கம் பெறும்பொழுது அல்லது ஏற்கனவே சந்தையில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் ஒரு கிளை/புதிய கம்பெனி துவக்கும்பொழுது, பொதுப் பங்கு நிறுவனம் உருவாகிறது. இத்தகைய நிறுவனங்கள் பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, தமது நிறுவனத்தின் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றன. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமாயின், பொதுமக்கள் பங்குதாரர்களாக, மூலதனத்திற்கும், நிறுவனத்தின் லாப நட்டத்திற்கும் உரியவர்களாக உள்ள நிறுவனமே பொதுப்பங்கு நிறுவனம் ஆகும்.

பங்குச் சந்தையின் வகைகள்

பங்குச் சந்தையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன

  1. முதன்மைப் பங்குச் சந்தை (Primary Market)
  2. இரண்டாம் நிலை பங்குச் சந்தை (Secondary Market)

முதன்மைப் பங்குச் சந்தை :

ஒரு நிறுவனம் நேரடியாகப் பங்குகளை வெளியிடுவதற்கு முதன்மைப் பங்குச் சந்தை என்று பெயர். பொதுப்பங்கு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் முதலியவை, நிதி திரட்டும்பொருட்டு, பங்குகளை வெளியிடுகின்றன. அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்புபவர்கள், அதற்கான படிவங்களை நிரப்பி, முதலீடு செய்ய விரும்பும் தொகைக்கான காசோலை (Cheque) அல்லது வரைவோலையை (Demand Draft) இணைத்து, முகவர்கள் மூலமாக விண்ணப்பிப்பார்கள். அவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு, பங்குகள் ஒதுக்கீடு செய்யப் படலாம் அல்லது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படலாம். ஒரு நிறுவனம் முதன்முதலில் பங்குகளை விற்பனை செய்வதை 'முதல் பங்கு வெளியீடு' (Initial Public Offer- IPO) என அழைப்பர். அதற்குப் பின்னர் வெளியிடும் பங்குகளை 'தொடர் பங்கு வெளியீடு' (Follow on Public Offer- FPO) என்பர்.

பங்குகளின் அடிப்படை விலை 'முக மதிப்பு ' (Face value) என அழைக்கப்படும். அதாவது, ஒரு பங்கின் விலை ரூபாய் 10 என நிர்ணயிக்கப்பட்டால், அப்பங்கின் முக மதிப்பு ரூ.10.00 ஆகும். மீண்டும் பங்குகளை விற்கும் பொழுது, அப்பங்குகளுக்கான தேவை அல்லது கிராக்கி (Demand) எவ்வாறு உள்ளதோ அதற்கேற்றவாறு முக மதிப்பைவிட அதிகமாகவோ (Premium),குறைவாகவோ (Discount) அதே அளவிலோ (At Par) நிர்ணயிக்கப் படலாம்.

இரண்டாம் நிலை பங்குச் சந்தை :

முதன்மைச் சந்தையில் பங்குகளை வாங்கியவர்கள், தம் பங்குகளை விற்கவோ, மற்றவர்கள் வாங்கவோ அணுகுவது இரண்டாம் நிலைப் பங்குச் சந்தை அல்லது வெளிச்சந்தை ஆகும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை(Listed shares) மட்டுமே வாங்கவோ விற்கவோ இயலும். அதாவது, பங்குகளை வெளியிட்ட நிறுவனங்கள், விதிமுறைப்படி பங்குச் சந்தையில் தங்கள் பங்குகளைப் பதிவு செய்து, பட்டியலில் சேர்க்கச் செய்ய வேண்டும். பின்பே அப்பங்குகளின் பரிவர்த்தனை நடைபெறும். பங்குகளின் விலை, நிறுவனத்தின் தரத்திற்கும், சந்தையின் பல்வேறு காரணிகளைப் பொறுத்தும், சந்தையில் அப்பங்குகளுக்கான தேவையைப் (Demand) பொறுத்தும் மாறிக்கொண்டே இருக்கும் (volatile). பரிவர்த்தனை செய்ய விரும்புபவர், சந்தை நிலவரத்திற்கேற்ற விலையைக் கொடுத்து பங்குகளை வாங்கவோ, அல்லது விலையைப் பெற்றுக்கொண்டு விற்கவோ செய்வார்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர் அந்நிறுவனத்தின் பங்குதாரர் எனப்படுவார். பங்குதாரருக்கு, நிறுவனத்தின் லாபத்தைப் பொறுத்து ஈவுத்தொகை/பங்காதாயம் (Dividend) கிடைக்கும். தேவையான பொழுது, தரகர்கள் மூலமாக, பங்குகளை விற்றுப் பணமாக்கிக் கொள்ளவும் செய்யலாம்.

பங்குத்தரகர்கள் (Stock Brokers) :

பங்குச் சந்தையில், பங்குகளை நேரடியாக வாங்கவோ விற்கவோ முடியாது. அதற்கென உள்ள, பங்குச் சந்தையின் உரிமம் பெற்ற உறுப்பினர்கள் மூலமாகவே பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த உறுப்பினர்களே தரகர்கள்(Brokers) எனப்படுவர். பங்குச் சந்தையில் முதலீடு செய்யவோ, பரிவர்த்தனை (Trading) செய்யவோ விரும்புபவர்களிம் இத்தகைய தரகர்களிடம் இருவிதமான கணக்குகளைத் தொடங்க வேண்டும். அவை
(1) Demat Account (2) Trading Account.

Demat Account என்றால் என்ன?

வங்கிகளில் நாம் பணத்தை வரவு செலவு செய்வது போல, நாம் வாங்கும்/விற்கும் பங்குகளின் வரவு செலவைப் பராமரிக்க, தரகர்களிடம் நாம் தொடங்கும் கணக்கே 'டீ-மேட்' கணக்கு ஆகும். முந்தைய காலத்தில் பங்குகள் காகிதத்தில் இருந்தன. இப்பொழுது பங்குகள் Electronic Format இல் பேணப்படுகின்றன. இதனால், பரிவர்த்தனைக்கான காலம் மிகக்குறைவதோடு, வீட்டில் இருந்தவாறே பரிவர்த்தனை செய்யவும் இயலுகிறது. அது மட்டுமில்லை, Physical Share மூலம் பரிவர்த்தனை செய்வது மிகக் கடினமாக இருந்ததோடு, அப்பரிவர்த்தனைக்கு முத்திரைக் கட்டணம் வேறு செலுத்த வேண்டியிருக்கும். Demat Share Transactionஇல் இத்தகைய தொல்லைகள் இல்லை. தவிர, பங்குகளுக்காக நாம் விண்ணப்பம் அனுப்புகையில், நமது Demat Accountஇன் விவரத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால், பங்குகள் நேரடியாக, நமது கணக்கில் வரவு வைக்கப் படும்.
விற்கவோ, வாங்கவோ அல்லது நம் பங்குகளை அடகு வைக்கவோ விரும்பினால், நாம் Demat Account வைத்திருப்பது அவசியம்.

Demat Account தொடங்க, (இந்தியாவில்), வருமான வரி எண் (Permanent Account Number) கண்டிப்பாகத் தேவை. வங்கிக் கணக்கு தொடங்கத் தேவைப்படுவது போலவே நமது அடையாள அட்டை, தற்போதைய முகவரிக்கான சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவை இத்தரகர்களிடம் (நிறுவனங்கள்) Demat Accountக்கான விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டால், நமக்கான கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு எண் கொடுக்கப்படும். அதற்குப் பின், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் Physical Share-களை, Demat Share-களாக மாற்றிக்கொள்ளவும், புதிய பங்குகளை வாங்க/விற்கவும் முடியும்.

Trading Account என்றால் என்ன?

Demat Account நமது கணக்கில் உள்ள பங்குகள், பராமரிக்கப் படும். அவ்வளவே! நாம் வாங்கி விற்க வேண்டுமானால், வர்த்தகத்திற்கான தனிக்கணக்கு (Trading Account) தொடங்கியாக வேண்டும். Demat Account உள்ளவர்கள் மட்டுமே Trading Account தொடங்க முடியும். வீட்டில் இருந்தவாறே இணையம் மூலமாகக் கூட பங்குப் பரிவர்த்தனை செய்யலாம். அதற்கான கணிணி மென்பொருளைப் பங்குத் தரகு நிறுவனத்திடம் பெற்று ( ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி) நமது கணிணியில் நிறுவிக் கொள்ளலாம். இதைச் செய்தோமானால், சந்தை நிலவரத்தை உடனுக்குடன் அறிந்து வாங்குவதா / விற்பதா என்று முடிவெடுப்பதும் Trading செய்வதும் எளிதாக இருக்கும். ஆயினும், நமது பங்கு வணிகம், அப்பங்குத் தரகர் வழியாகவே நடைபெறுகிறது. ஆகவே, நமது பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவாறு, நாம் அவர்களுக்குக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.

பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.
01. முதலீட்டாளர் (Investor)

02. நாள்வணிகம் செய்வோர் (Day Trader)

முதல் வகை - முதலீட்டாளர் (Investor) :

இவர்கள் பங்குகளில் முதலீடு செய்து தக்க சமயத்தில், (அதாவது, பங்கின் விலை அவர்கள் எதிர்பார்க்கும் அளவு உயரும்பொழுதோ, அல்லது அவர்களுக்குப் பணம் தேவையான பொழுதோ ) விற்பனை செய்வர். இத்தகைய முதலீடுகள் குறுகிய கால முதலீடாகவோ(Short Term Investment), நீண்ட கால முதலீடாகவோ(Long Term Investment) இருக்கலாம்.

இரண்டாம் வகை - நாள்வணிகம் செய்வோர் (Day Trader) :

இவர்கள் பங்குகளை அன்றே வாங்கி அன்றே விற்று லாபம் சம்பாதிக்க நினைப்பவர்கள். இப்பங்குகளின் விலை உயரும் அல்லது சரியும் என யூகித்து அதற்கேற்றவாறு வணிகத்தில் ஈடுபடுவர். இதில் லாபம் சம்பாதிப்பது எவ்வளவு சுலபமோ அத்தனைக்கத்தனை, போட்ட முதலை இழக்கும் வாய்ப்பும் அதிகம். மிகவும் கவனமாக விளையாட வேண்டிய அபாயகரமான விளையாட்டு இது.

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள்.

பங்குச் சந்தை நிலையில்லாமல் மேலும் கீழும் ஊசலாடும் தன்மையுடையது. சொல்லப் போனால், அந்த ஊசலாட்டமே சந்தையின் உயிர்த்துடிப்பு. அது இல்லாமல் போனால் என்ன பரபரப்பு (Thriill) இருக்கமுடியும்? இந்த ஏற்ற இறக்கங்களே பங்குச்சந்தையின் மிக முக்கியப் பண்பாகும். இந்த ஏற்ற இறக்கங்கள் எதன் அடிப்படையில் உருவாகின்றன தெரியுமா?

  1. நாட்டில் நிலவும் அரசியல் / பொருளாதாரச் சூழ்நிலைகள் (நிதி நிலை அறிக்கை வெளியிடப்படுதல், வரவு செலவுத்திட்டம் (Budget)
  2. மத்திய வங்கி/நிதி அமைச்சகம் கொண்டுவரும் சில நெறிமுறைகள்/கட்டுப்பாடுகள் அல்லது சில விதிமுறைகள் விலக்கப் படுதல் (தொழிற்கொள்கை குறித்த அறிவிப்புகள், வெளிநாட்டு முதலீட்டுக்கான சட்ட திட்ட வரவுகள் முதலியன)
  3. உலகச் சந்தையில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் மாற்றங்கள் (அமெரிக்க வங்கிகளின் மோசமான நிலைமை, உலகப் பொருளாதாரத் தொய்வு)
  4. நிறுவனங்களின் காலாண்டு/ஆண்டு அறிக்கைகள் வெளியிடப் படுதல் அல்லது அந்நிறுவனங்கள் குறித்த சில தகவல்கள் (லேமன் நிறுவனம், சத்யம் நிறுவனம் )
  5. சில சமயம் எதிர்பாராத, பொய்யான வதந்திகள் கூட பங்குச் சந்தை நிலவரத்தை பாதிக்கின்றன.(யூக வியாபாரம் செய்பவரில் சிலர், இத்தகைய தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்பி லாபம் காண முயல்வதாகவும் சில சமயங்களில் குற்றச்சாட்டு எழுகிறது)

எது எப்படியோ, 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்பது போல, திறமையான, அறிவுக் கூர்மையும், சமயத்துக்குத் தக்கபடி செயல்படும் வேகமும் உள்ள முதலீட்டாளர்கள், எத்தகைய ஊசலாட்டத்திலும், லாபம் சம்பாதித்து விடுவர். குறைந்த பட்சம், நட்டமடையாமல் தப்பித்துக் கொள்வர். அது இல்லாதவர்கள் கதிதான் திண்டாட்டமாகிவிடுகிறது. ஆனால், சந்தை மிக அதிகமாக ஊசலாடிக்கொண்டே இருக்குமானால், சராசரி முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் அதில் ஈடுபட மாட்டார்கள் என்பது ஒரு குறை.

காளையும் கரடியும்.

பங்குச் சந்தையில் பங்குகளின் விலை ஏறுமுகமாக இருப்பின் அதைக் காளைச் சந்தை (Bull Market)எனவும், வீழ்ச்சியடையும்பொழுது கரடிச் சந்தை(Bear Market) எனவும் கூறுவது வழக்கம். ஏன் தெரியுமா? காளை வேகமாகத்தாக்கக் கூடியது என்றும் கரடி மந்தமானது என்றும் கருதப் படுகிறது. எனவே, பங்கு விற்பனை சூடு பிடித்து, விலைகள் ஏறுகையில் அது காளைச் சந்தை எனவும், பங்குகளின் விலைகள் சரிந்து, விற்பனை மந்தமாகும்பொழுது அது கரடிச் சந்தை எனவும் அழைக்கப் படுகிறது.

சிலர் "Bulle speculative" என்ற ஃபிரஞ்சு வார்த்தையில் இருந்து தோன்றியது எனவும், லண்டனில் கரடித்தோல்களை விற்பவர்கள், கரடிகளைப் பிடிப்பதற்கு முன்பே அதற்கு விலை பேசிவிடுவது வழக்கம் என்பதால், short sellingஐக் குறிக்க கரடிச் சந்தை என்ற சொல் பயன்படுத்தப் பட்டது எனவும், பொதுவாக சந்தை சரியும்பொழுதுதான் Short Selling செய்வது வழக்கம் என்பதால், சந்தையின் வீழ்ச்சியடையும்பொழுது அது கரடிச் சந்தை என வழங்கப்படுகிறது எனவும் கருதுகின்றனர்.
பொதுவாக, பணவீக்கம் குறைவாகவும், நாட்டின் பொருளாதாரம் சீராகவும், உற்பத்தி உயர்ந்தும் இருக்கும்பொழுது காளைச் சந்தைப் போக்கு நிலவுகிறது. இதற்கு நேரெதிரானது கரடிப் போக்கு. இப்போக்கு நிலவுகையில் நாட்டில் வேலையின்மையும், பணவீக்கமும் காணப் படுகிறது.

வரலாற்று நிகழ்வுகள்:

ஏப்ரல் 2003 முதல், ஜனவரி 2009 வரையுள்ள காலத்தில் மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து காளைச் சந்தைப் போக்கு நிலவியது. இந்த ஐந்து ஆண்டு காலத்தில், சென்செக்ஸ் புள்ளிகள் 2900த்தில் இருந்து 21000 வரை உயர்ந்தது. அதே போல், மிக மோசமான கரடிச் சந்தைப் போக்கு 1929ம் வருடம், வால் ஸ்ட்ரீட் சந்தையின் வீழ்ச்சியாகும். இந்நிகழ்வின்பொழுது சந்தையில் பங்குகளின் விலை 89% குறைந்தது.

கரடிச் சந்தையில் பங்குகளை வாங்கி, காளைச் சந்தையில் விற்பதே புத்திசாலித்தனம். ஆனால், பெரும்பாலானவர்கள், சந்தை உயரும்பொழுது ஆர்வத்துடன் பங்குகளை வாங்குவர். சந்தை சரிவில் இருக்கும்பொழுது, பயந்துபோய் விற்றுவிடுவார்கள். இதனால் பெரும் நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்காக இந்த ஆலோசனைகள்:

சந்தை எப்பொழுது ஏறும், எப்பொழுது சரியும் என்பதை, சாதாரணமாக முதலீட்டாளர்கள் அறிவது கடினம்.மென்மேலும் ஏறும் என்று நினைக்கும்பொழுது சரியத் தொடங்கும், சரிந்து கொண்டே போகும் என்று கணிக்கும்பொழுது திருப்பம் ஏற்பட்டு ஏறத்தொடங்கும்.

நீங்கள் ஒரு பங்கின் விலை ஏறும் என நினைத்து ரூ.200.00 என ஆயிரம் பங்குகளை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் வாங்கியபின் விலை சரிந்து ரூ. 150.00 ஆகிவிடுகிறது. நீங்கள் அதை நட்டத்துக்கு விற்றுவிடுகிறீர்கள். மறு நாளே அது 240.00க்கு ஏறிவிடுகிறது.உங்களுக்கு என்ன செய்வதென்றே புரிவதில்லை. இது உங்களுடையது மட்டுமல்ல, பலருக்கும் இதே அனுபவம்தான். இதற்கு என்ன செய்வது?

  1. நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகை முழுவதையும் ஒரே சமயத்தில், ஒரே பங்கில் போடாதீர்கள். (அதாவது, ரூ.200 என்ற விலையில் 200 பங்குகளை வாங்குகிறீர்கள்.)
  2. நீங்கள் வாங்கிய பங்கின் விலை இறங்கும்பொழுது மீண்டும் ( ரூ.150.00 என்ற விலையில் ) நூறு அல்லது இரு நூறு பங்குகளை வாங்குங்கள்.
  3. இவ்வாறு பங்குகளின் விலை சரியும்பொழுது வாங்குவதை, Averaging என்பர். விலை ஏறும்பொழுதும், உங்களிடம் உள்ள பங்குகளை மொத்தமாக விற்காதீர்கள். பாதியை மட்டுமே விற்பனை செய்யுங்கள். விலை மேலும் ஏறினால், மீதத்தை விற்கலாம். குறைந்தால், இன்னும் கொஞ்சம் பங்குகள் வாங்குங்கள்.
  4. பங்காதாயம் தரும் நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யவும். பங்குகளின் விலை இறங்கியிருக்கும் பொழுது, குறைந்தபட்சம் அதுவாவது கிடைக்கும். நட்டமான நிறுவனங்களின் பங்குகளை வாங்கவே வாங்காதீர்கள்.
  5. நிறையப் பணம் வைத்திருக்கிறீர்கள், துணிகரமான முதலீடுகளில் இறங்க விரும்புகிறீர்கள் என்றால் மட்டுமே Z வகை பங்குகளில் முதலீடு செய்யுங்கள். இல்லையெனில், நல்ல, தரமான நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யவும்
  6. பங்குச் சந்தை மிகுந்த மாற்றங்களுக்கு உட்படும்பொழுது, மிகவும் விழிப்புடன், சந்தை நிலவரத்தைக் கண்காணிப்பது முக்கியம்.
  7. கரடிச் சந்தை நிலவும் தருணமே முதலீடு செய்யச் சிறந்த தருணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  8. உயரே செல்லும் ராட்டினச்சக்கரம் (Giant wheel), கீழிறங்குவதும், கீழே உள்ள சக்கரம் மேலெழும்புவதும் இயற்கை. பங்குச் சந்தையும் அப்படித்தான். எனவே, கரடிச்சந்தை நிலவரத்தின் பொழுது, பீதியடைந்து, எல்லோரும் விற்கிறார்களே என்று நீங்களும் விற்க வேண்டாம். பொறுத்திருங்கள். முடிந்தால், மேலும் மேலும் நல்ல பங்குகளில் முதலீடு செய்யுங்கள்.
    குறிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டிய விதி ஒன்று உண்டு. அது, உங்கள் அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடாது என்பதுதான். பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபடுகையில், ஒரே பங்கிலோ, ஒரே விதமான Industry இலோ உங்கள் பணத்தை முடக்காமல் பல விதப்பங்குகளிலும் பகிர்ந்து போடுவது, உங்கள் முதலீட்டை சந்தையின் ஏற்றத் தாழ்வு காரணமாக இழக்கும் அபாயத்தைக் குறைக்க வல்லது.

பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே. பங்குச்சந்தையில், குறிப்பாக நாள் வணிகத்தில் புதிதாக ஈடுபடுபவர்கள் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்று இந்தப் பகுதியில் பார்த்தோம்.

நாள் வணிகம் மிக எளிமையானதாகவும் அதிக லாபகரமானதாகவும் தோற்றமளிக்கலாம். ஆனால், எதிரி நாட்டில் உளவு அறியச் சென்றிருக்கும் இராணுவ வீரன் போல் நாம் ஒவ்வொரு கணமும் தயார் நிலையில் இருப்பது அவசியம். நாள் வணிகத்தின்பொழுது பின்பற்ற வேண்டிய சில விதிகள் குறித்தும், நாள் வணிகத்தில் ஆதாயமடைவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்தும் சில கருத்துகளை இக்கட்டுரையில் காணலாம்.

தொலைக்காட்சியில் / அல்லது செய்தித்தாளில் கொடுக்கப்படும் கணிப்புகளை அப்படியே நம்பவேண்டாம். இவ்வாறு கூறப்படும் பங்குகளில் அதிகப்பேர் ஆர்வம் காட்டுவதால் விலை கன்னாபின்னாவென்று அதிகரிக்கும். இத்தகைய போக்கு நீடிக்கும் என நம்ப இயலாது. நீங்களே, சரியான பங்குகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அதே போல் பிறர் வாங்குவதைப் பார்த்து வாங்கக் கூடாது என்பதை ஏற்கனவே கண்டோம்.

ஆர்வமிகுதியால் ஏராளமான பணத்தை ஒரே பங்கில் போடவேண்டாம். எவ்வளவுதான் மிகச் சிறந்த நிறுவனத்தின் பங்காக இருப்பினும் 10 சதவீதத்திற்கு மேல் ஒரே பங்கில் போடுவது அபாயமானது. சொல்லப்போனால் சரியான அளவு 5 சதவீதம்தான். மேலும் ஒரு பங்கின் விலை சரிந்திருக்கும் பொழுது வாங்குவது சிலரது வழக்கம். மீண்டும் ஏறும் பொழுது ஆதாயம் கிடைக்கும். இந்தத் திட்டம் சரியானதுதான். ஆனால் ஒரு பங்கின் விலை அதலபாதாளத்தில் விழுந்துவிட்டதானால், அதை வாங்குவதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்காதீர்கள். இவ்விதி, உச்சாணிக்கொம்பு வரை விலை ஏறிவிட்ட பங்கிற்கும் பொருந்தும்.

உங்கள் கைப்பணத்தைப் போட்டு பங்கு விற்பனையில் ஈடுபடுமுன், கற்பனையாக நீங்கள் வாங்கி, விற்று பயிற்சி செய்யுங்கள். அதில் லாபம் பெற முடிகிறதா? உங்கள் யூகங்கள் பலிக்கின்றனவா என்பதை சோதனை செய்து அறிந்துகொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தேறிய பின், கைப்பணத்தை முதலீடு செய்யலாம். அனுபவமின்றி நேரடியாகப் பணத்தைப் போட்டுவிட்டு பின் விழிப்பதைவிட இது நல்லது.

முக்கியமாக லாபம் தரக்கூடிய துறைகள் எவை என்றும் நல்ல நிறுவனங்கள் என்னென்னவென்றும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். தகவல் தொழில் நுட்பம், வங்கிகள் முதலியவை நல்ல துறைகள். இது குறித்துத் தெரிந்துகொள்ள நீங்கள் பல்வேறு நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் முதலியவற்றைப் பார்ப்பது நல்லது. ஆனால் அவை கூறும் ஆலோசனைகள் எல்லாவற்றையும் அப்படியே நம்பிவிடவேண்டாம். உங்கள் சிந்தனைத்திறனையும் தர்க்க அறிவையும் பயன்படுத்தி எப்பங்குகளில் ஈடுபடலாம் என நீங்களே முடிவு செய்யவும்.

பங்குச்சந்தை விளையாட்டு மிகுந்த கவனத்துடன் ஆடப்படவேண்டிய ஒன்று. விழிப்புடன் இருப்பதும் முடிவுகளை உடனடியாகச் செய்வதும் அவசியம். நாள் வணிகத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து சந்தையைக் கண்காணித்து வரவேண்டும். வீட்டில் இருந்தவாறே கணிணியில் வணிகம் செய்பவராக இருப்பின், மின் தடை, கணிணிக் கோளாறுகள் இவை காரணமாக இடையூறு நேராதவாறு பராமரிப்பதும், UPS போன்றவற்றை வைத்திருப்பதும் அவசியம்.

ஒரு விற்பனையைச் செய்து முடிக்குமுன் மனக்கோட்டை கட்டாதீர்கள். இது உங்கள் கவனத்தைச் சிதறச் செய்வதோடு, விற்பனை எதிர்பார்த்த பலனை அளிக்காவிடில் மனச்சோர்வையும் உருவாக்கும். நேற்று சந்தை இருந்தது போல் இன்றும், இன்று இருப்பது போல் நாளையும் இருக்கவே இருக்காது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்திற்கும், புதுப்புது உத்திகளைக் கையாள்வதற்கும் தயார் நிலையில் இருங்கள். ஒவ்வொரு நாள் பங்குச் சந்தை மேலும் கீழும் அதிகம் ஊசலாடும். பங்கின் விலைகள் அடிக்கடி ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும். பரபரப்பு மிகுதியாக இருக்கும். மற்றொரு நாளிலோ சந்தை மிக மந்தமாக இருக்கும்.

ஒவ்வொரு பங்கிற்கும் 'Stop Loss' என்று ஒன்று உண்டு. அதை மறக்காமல் இருங்கள். விலை சரிகையில் அது அடி வரை சென்று விழும் வரை காத்திருக்காதீர்கள். Stop Loss கோட்டை அது தொடுகையில் விற்றுவிடுங்கள். சந்தையின் போக்கினைக்கண்டு பீதி அடையாமல் இருப்பதும் மிக முக்கியம்.

பங்குச்சந்தையில் ஈடுபட, மனத்திண்மையும் கட்டுப்பாடும்கூட அவசியம். இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பதுதான் சந்தையின் வழக்கம் எனினும், அதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். 'பேராசை பெரு நட்டம்' என்பது பங்குச்சந்தைக்கும் பொருந்தக் கூடியதே.

மறக்கக் கூடாத சில குறிப்புகள்:

  • எல்லோரும் வாங்கும் பொழுது விற்பனை செய்யவும் எல்லாரும் விற்கும்பொழுது வாங்கவும் கற்றுக்கொள்ளுங்கள். இது படிக்கும்பொழுது எளிதாகத் தோன்றலாம். ஆனால் செயல் படுத்துவது கடினம். சந்தையில் எதிர்நீச்சல் அடிக்க இக்கொள்கை உதவும். எல்லோரும் ஒரு பங்கில் ஆர்வம் செலுத்தி வாங்குகையில் அப்பங்கின் விலை அதிகரிக்கும். அப்பொழுது உங்கள் கையில் அப்பங்குகள் இருப்பின் விற்றுவிடுங்கள். அதே போல், பங்குச்சந்தை கரடிப்போக்கில் இருக்கையில் மக்கள் பீதியடைந்து விற்பார்கள். உண்மையில் அப்பங்குகள் நல்ல பங்குகளாக இருக்கலாம். ஆனால் கரடிப்போக்கின் பொழுது குறைந்த விலையில் பங்குகள் கிடைக்கும். அப்பொழுது வாங்கிப் போடுங்கள். லாபம் பெறும் வழி இதுவே.
  • Penny Stocks எனப்படும், முன்பின் தெரியாத் சிறிய நிறுவனங்களின் பங்குகளில் ( Z Category) முதலீடு செய்யாதீர்கள். மேலும் ஒரு பங்கின் பழைய வரலாற்றை, பழைய செயல்பாட்டை நம்பி அதை வாங்காதீர்கள். அதன் எதிர்காலத்தைக் குறித்த கணிப்புகளின் அடிப்படையிலேயே பங்குகளில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

தகவல்கள் Google

நன்றி Google…,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக